சேலம் வன மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் வனத்தில் தீ தடுப்புப் பணியில் வன ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கோடை காலத்திற்கு முன்பே வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளது. இதனால் வனப்பரப்பை பாதுகாக்கும் பணியில் வன ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோடைக் காலத்தில் கடும் வெயிலின் காரணமாக ஆங்காங்கே தீ பரவல் ஏற்படும். இந்த தீ பரவலைத் தடுக்க, காட்டிற்குள் தீ தடுப்புக்கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வனத்தை ஒட்டிச் செல்லும் சாலையோரங்களில் தேங்கிக் கிடைக்கும் சருகுகளை அப்புறப்படுத்துதல், மனிதர்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்தல் போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர்.
இதற்காக வனத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள், வனக்கிராம குழுக்களில் ஈடுபடும் நபர்களை முழு வீச்சில் களத்தில் இறக்கிவிட்டுள்ளனர். அதன்படி, சேலம் வன மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், ஆத்தூர் வனப்பகுதியில் தீ தடுப்புப் பணியை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் வன மண்டலத்திற்கு உட்பட்ட வன பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமுடன் பணியாற்றி வருகிறோம். தீ தடுப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணித்து வருகிறோம்.இதனால் கோடை முடியும் வரை அனைவரும் களத்தில் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.


