மின்சார கொள்முதலில் மெகா ஊழல்; விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய தவெக அரசு!” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில், ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, கட்சியின் 55-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி;-
மின்சாரக் கொள்முதல், விலைவாசி உயர்வு, இடைத்தேர்தல் முடிவுகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மாற்றுக் கட்சியில் இணைவதாக வெளியான தகவல்கள் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.
மின்சாரக் கொள்முதலில் முறைகேடு எனக் குற்றச்சாட்டு:-
கடந்த திமுக ஆட்சியில் மின்சாரக் கொள்முதல் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒப்பந்தங்களை ரத்து செய்த தமிழக வெற்றிக் கழக அரசு, தற்போது ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 கொடுத்து வாங்க உள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
மேலும், ஐந்து நிறுவனங்களிடம் இருந்து 4,400 மெகாவாட் மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்கும் நடவடிக்கையால் மின்வாரியத்தின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். ஏற்கெனவே மின்வாரியம் ரூ.2.48 லட்சம் கோடி கடனில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த மின்சாரக் கொள்முதல் நடவடிக்கையை மக்கள் மத்தியில் மெகா ஊழல் திட்டம் என விமர்சித்தார்.
விலைவாசி உயர்வால் மக்கள் பாதிப்பு:-
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், அரிசி விலை கிலோ ரூ.100-ஐத் தாண்டியுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், விலைவாசியைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விமர்சித்தார்.
இடைத்தேர்தல் வெற்றி குறித்து விமர்சனம்:-
இடைத்தேர்தலில் பணபலம் மற்றும் அதிகார பலத்தைப் பயன்படுத்தியே தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் தவெக பெற்ற வாக்குகள் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்றும், முதலமைச்சர் விஜய் தீவிரமாகப் பிரசாரம் செய்தும் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் திரளவில்லை என்றும் கூறினார்.
தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியை விமர்சித்த முதலமைச்சர் விஜய், தேர்தலுக்குப் பிறகு அதே கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைவார்களா?
அதிமுகவைச் சேர்ந்த 2,000 கிளைச் செயலாளர்களும், 1,400 ஒன்றியச் செயலாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக அமைச்சர் ஆதார் அர்ஜுனா கூறியிருப்பது குறித்துப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, இந்தத் தகவல் ஒருபோதும் நடக்காது என்றார்.
பல ஆண்டுகளாக உழைத்து அதிமுகவில் பொறுப்புகளைப் பெற்றுள்ள நிர்வாகிகள், கட்சியை விட்டு வெளியேறுவார்கள் எனக் கூறுவது தவறானது என்றும் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் போதிய நிர்வாகிகள் இல்லாததால் மற்ற கட்சிகளில் இருப்பவர்களை அழைத்து இணைக்க முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார். அமைச்சர்கள் ஆதார் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் பல்வேறு கட்சிகளில் இருந்த பின்னரே தவெகவில் இணைந்ததாகவும் அவர் கூறினார்.
அன்புமணி ராமதாஸ் குறித்து கருத்து;-
அதிமுக குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்த கருத்துகளை வரவேற்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். அதே நேரத்தில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடங்கிய கட்சியை மேலும் வலிமைப்படுத்த அன்புமணி ராமதாஸ் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தான் கூறும் கருத்துகளைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், நல்ல எண்ணத்திலேயே இதனைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.



-SXgDfGgJfO.jpg)