வாழப்பாடி அருகே ₹4,000 லஞ்சம் பெற்றபோது சிக்கினர் – சேலம் லஞ்ச ஒழிப்புப் போலீசார் நடவடிக்கை
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர்.
செக்கிடிப்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருபவர் சரவணன். அதே பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக அவரை அணுகியுள்ளார். அப்போது, பட்டா பெயர் மாற்றம் செய்ய ₹20,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ராமமூர்த்தி சேலம் லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவப்பட்ட ₹4,000 பணத்தை ராமமூர்த்தி கிராம நிர்வாக அலுவலர் சரவணனிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார், சரவணனை கையும் களவுமாகப் பிடித்தனர். தொடர்ந்து, அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் கிராம உதவியாளர் மாதவனையும் கைது செய்தனர்.
பட்டா பெயர் மாற்றத்திற்காக லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



