சேலம் தம்மம்பட்டி கொள்ளை வழக்கு: 5 பேர் மீது குண்டர் சட்டம்
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே இரு வீடுகளில் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தம்மம்பட்டி அருகே சித்தன்பட்டிக்குட்டை, மண்மலை ஊராட்சி வாணிக்கிணறு பகுதியில் கடந்த 18ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் ஹெல்மெட் அணிந்த 7 பேர் கொண்ட கும்பல், மாதேஸ்வரன் மற்றும் கணேசன் ஆகியோரது வீடுகளுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி சுமார் 20 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றது.
இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
ஆத்தூர் டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, செந்தாரப்பட்டி மேற்குமாதா கோயில் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன்கள் சஞ்சய், சந்துரு (19), அதே பகுதியை சேர்ந்த ரவி மகன் ரகுநாத் (23), திருச்சி பொன்மலையை சேர்ந்த குழந்தை ஏசு ராஜாவின் மகன் அலெக்சாண்டர் சாம்சன் (31), கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த தியாகராஜன் மகன் விநாயகமூர்த்தி (21) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீசார் சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்துக்கு பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், 5 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டனர்.



-SXgDfGgJfO.jpg)