சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தர்ணா போராட்டம்
சேலம்: தலைவாசல் அருகே ஏரி பயன்பாட்டில் இருந்த நிலம் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டி, ஏரியை மீட்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த இலுப்பநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட நாட்டார் அக்ரஹாரத்தில் சுமார் 60 ஆண்டுகளாக ஏரி பயன்பாட்டில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. வீரகனூர் ஏரியில் இருந்து நாட்டார் அக்ரஹாரம் ஏரிக்கு தண்ணீர் வந்து சேர்வதன் மூலம் புளியங்குறிச்சி, வெள்ளையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும், இந்த ஏரிப் பகுதியில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகளும் நடைபெற்று வந்துள்ளன.
இந்நிலையில், ஏரியின் பயன்பாட்டிற்காகத் தனிநபர் ஒருவர் தனது நிலத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அவரது வாரிசுதாரர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் போலி ஆவணங்களைத் தயாரித்து, ஏரி பயன்பாட்டில் இருந்த நிலத்தை விற்பனை செய்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதனால் அப்பகுதியில் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த நான்கு மாதங்களாக 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் நடைபெறாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள், நுழைவாயில் முன்பு முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்து, நுழைவாயில் கதவை மூடினர். இதனால் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏரி நிலம் தொடர்பாகத் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் போலி ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், இதில் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, ஐந்து பேர் மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்று மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, ஐந்து பேர் அதிகாரியிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.
விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.



-SXgDfGgJfO.jpg)