சேலம்
தமிழக வெற்றிக் கழகத்தின் நான்கு மாத ஆட்சி நிர்வாகத் திறமையற்ற ஆட்சியாக உள்ளது என்றும், 120 நாட்களைக் கடந்தும் முதலமைச்சர் விஜய் இன்னும் நடிகராகவே உள்ளார் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், “தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்” என்ற நிலையைப் போல ஆட்சி நடைபெற்று வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
தமிழகத்தில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், திட்டமிட்டு அவர்களை கொண்டு வந்து பதவிகள் நிரப்பப்படுவதாகவும் வேல்முருகன் குற்றம்சாட்டினார். அதிகாரிகள் நினைப்பதே ஆட்சி என்ற நிலை உருவாகியுள்ளதாகவும், தலைமைப் பண்புடன் கூடிய நிர்வாகம் இல்லாததால் தமிழகம் பல்வேறு கட்டுப்பாடற்ற விளைவுகளை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மின்சாரம், மழை மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் போதிய திட்டமிடல் இல்லை என்றும் அவர் கூறினார். விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராடி வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழக அரசின் கடன் நிலை குறித்து கேள்வி எழுப்பிய வேல்முருகன், கடற்கரையை நம்பி வாழும் மீனவர்கள் வசிக்கும் பகுதியில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராடி வருவதாக கூறினார். மக்கள் விரோத திட்டங்களை கொண்டு வரமாட்டோம் என கூறிய அரசு தற்போது சட்டங்களையும் முடிவுகளையும் மக்களிடம் திணித்து வருவதாகவும் விமர்சித்தார்.
“முதல்வர் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும்”
முதலமைச்சர் விஜய் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து, மக்களின் பிரச்சினைகள் குறித்து கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தினார்.
“மேடைகளில் வீர வசனம் பேசும் விஜய், மக்கள் பிரச்சினைகள் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிப்பதில்லை. சட்டமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் கிடைப்பதில்லை” என அவர் தெரிவித்தார்.
விஜயின் உரைகள் முழுவதும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட ஸ்கிரிப்ட் போன்று இருப்பதாகவும், வசனகர்த்தா எழுதி கொடுத்து, உடல் அசைவுகள் உள்ளிட்டவற்றை ஒத்திகை பார்த்த பின்னரே அவர் பேசுவதாகவும் வேல்முருகன் விமர்சித்தார்.
கரூர் சம்பவம் குறித்தும் கேள்வி
கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பிய அவர், “தவறு செய்தால் யாராக இருந்தாலும் விடமாட்டேன்” என கூறியவர்கள், இந்த விவகாரத்தில் யார் காரணம் என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே நீதிமன்றத்திலும் கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும், கனிமவள கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தொடர்ந்து நூற்றுக்கணக்கான லாரிகள் கனிம வளங்களை ஏற்றிச் செல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
“தகவல் அறியும் உரிமை சட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சி”
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்விகள் எழுப்பப்பட்டால், ஆட்சியில் நடைபெறும் தவறுகள் வெளிச்சத்திற்கு வரும் என்பதால் அரசாணை மூலம் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வேல்முருகன் குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டிய நிலை அரசுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்பதே தங்களது நிலைப்பாடு என தெரிவித்த வேல்முருகன், தேர்தல் மூலம் வெற்றி பெற்றவர்களை பேரம் பேசி கட்சி மாற்றம் செய்வது ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என விமர்சித்தார்.
மேலும், அரசு அதிகாரிகளுக்கு தற்போதைய அரசு மற்றும் அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு சதவீத மக்களின் கேள்விகளுக்குக் கூட பதில் அளிக்க முடியாத நிலையில் அரசு இருப்பதாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டினார்.



