விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் தனி கவனம் செலுத்திவருகின்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களாகிய நமது பங்களிப்பும், கடமையும் மிக அவசியமான ஒன்றாகும். கடல் ஆறு மற்றும் குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தைத் தருகிறது.. வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள் இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித இரசாயனக் கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை தீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளைப் பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மோக்கோல் பொருட்களைப் பயன்படுத்தக் கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு நீர் சார்ந்த மக்கக்கூடிய நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக இயற்கைப் பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)