ட்ரெண்டிங்

பதவி கேட்ட ஆதவ் அர்ஜுனா” – EPS பரபரப்பு பேச்சு !

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி கேட்டு ஆதவ் அர்ஜுனா என்னை சந்தித்தார்” – எடப்பாடி பழனிசாமி

தவெக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும்; சேலம் பொதுக்கூட்டத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார்

சேலம்: சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தாதகாப்பட்டியில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

நிலையில்லாத ஆட்சி

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

தவெக அரசு, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தயவுடன் செயல்பட்டு வருகிறது. இது நிலையில்லாத ஆட்சி. எப்போது வேண்டுமானாலும் கவிழும். மக்களைப் பற்றி சிந்திக்காத அரசாங்கமாக உள்ளது. மக்களுக்கு நல்ல குடிநீர், சாலை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். சேலம் மாநகரில் கனமழை பெய்யும்போது, சாலைகளில் தேங்கும் தண்ணீர் வெளியேற வழியில்லாத நிலை உள்ளது. விலைவாசியைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தப் பிரச்னைகள் குறித்து கவலைப்படாமல், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதிலேயே ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. எப்போது ஆட்சி செய்தாலும் மக்களுக்குத் தேவையான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தோம். ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் தங்களது நலனுக்காக மட்டுமே செயல்படுகின்றனர்.

மேட்டூர் அணை குறித்த கேள்வி

அண்மையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வந்தபோது, வழிநெடுகிலும் பேரிகார்டுகள் அமைக்க ரூ.4.50 கோடி செலவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேட்டூர் அணையே அந்தக் காலத்தில் ரூ.4.50 கோடியில் கட்டப்பட்டது.

கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனால், அதிமுகவைப் பார்த்து தீர்ந்து போன கட்சி என்று கூறுகின்றனர். நான் கிராமத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்தவன். மக்களின் பிரச்னைகளை உணர்வுபூர்வமாகப் புரிந்துகொண்டவன்.

நல்ல சாலைகள், குடிநீர் வசதிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டன. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைப் போன்று வேறு எந்த ஆட்சியிலும் கொண்டுவர முடியாது.

தற்போது முடிவடைந்த சட்டமன்ற நிதிநிலை அறிக்கையிலும், மானியக் கோரிக்கையிலும் சேலம் மாவட்டத்திற்கு எந்தத் திட்டமும் வரவில்லை. தமிழகம் முழுவதும் எந்தப் பெரிய திட்டமும் கொண்டுவரப்படவில்லை.

“ஆதவ் அர்ஜுனா பதவி கேட்டார்”

பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைப் போன்று பல கட்சிகளுக்குச் சென்று வந்தவர்கள் நாங்கள் இல்லை. அவர் திமுகவில் இருந்தார். பின்னர் விசிகவுக்குச் சென்றார். அதன்பிறகு என்னிடம் வந்து அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று கேட்டார்.

அப்போது, அதிமுகவில் கட்சிப் பதவிகளை விற்பனை செய்வதில்லை என்றும், உழைப்பவர்களுக்குத்தான் பதவி வழங்கப்படும் என்றும் கூறினோம். இதனால் தவெகவுக்குச் சென்று, பின்னர் அந்தக் கட்சியை குத்தகைக்கு எடுத்துக்கொண்டார்.

பல கட்சிகள் மாறிய ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிமுகவைப் பற்றி பேசத் தகுதியில்லை. எந்தக் கட்சியிலும் நிலைத்து இருக்காத அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஒரு வேடந்தாங்கல் பறவையைப் போன்று உள்ளார்.

கரூர் சம்பவம் குறித்து விமர்சனம்

கரூரில் நடைபெற்ற தவெக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களைப் பார்க்கக்கூட செல்லவில்லை. பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை.

கட்சி அலுவலகத்தை 15 நாட்கள் மூடிவிட்டு சென்றுவிட்டனர். வீர வசனம் பேசியவர் வெளிமாநிலத்திற்குச் சென்று பதுங்கிவிட்டார். 

அப்படிப்பட்டவர்கள்தான் தவெகவினர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தொடங்கிய தவெக, இதுவரை ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. முதல்வர் விஜய் லண்டனில் ரூ.15,300 கோடி முதலீட்டை ஈர்த்ததாகக் கூறுகின்றனர். இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தவெக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு திட்டங்களை வழங்குவோம் என்று கூறினர். ஆனால், எந்தத் திட்டமும் கொண்டுவரவில்லை. மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று, ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை மறந்த கட்சியாக தவெக உள்ளது.

மின்பற்றாக்குறை குறித்து குற்றச்சாட்டு

டெங்கு காய்ச்சலைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்வெட்டுக்குப் பதிலாக மின்பற்றாக்குறை என்று அமைச்சர் கூறுகிறார். சுமார் 2,500 மெகாவாட் மின்பற்றாக்குறை இருப்பதாகவும், மக்கள் மின்வெட்டால் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதற்கு முன்பு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.18-க்கு மேல் வாங்கவில்லை. ஆனால், தற்போது ஒரு யூனிட் ரூ.30-க்கு வாங்கப்படுகிறது. 

அரசு அலுவலகங்களில் டிமாண்ட் செய்து லஞ்சம் வாங்கும் சூழல் நிலவுகிறது.தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது. 

முன்பெல்லாம் அனுபவமும் திறமையும் வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பார்கள். ஆனால், தவெகவில் தேர்தல் வியூக வகுப்பாளர்கள்தான் ஆலோசகர்களாக உள்ளனர்.

சிபிஐ விசாரணை குறித்து கருத்து

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்தால் யார் எங்கெங்கு இருப்பார்கள் என்பது தெரியாது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

விசாரணை முழுமையாக முடிவடைந்தால், இந்த அரசாங்கம் இருக்குமா என்பது தெரியாது. மேட்டூர் அணையில் தண்ணீர் குறைந்து வருகிறது. தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை கர்நாடகாவிடமிருந்து தவெக அரசு பெறவில்லை.

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் அதிமுக வெற்றி பெற்ற இடங்களில்தான் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். தவெக அரசுக்கு இடைத்தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்