ட்ரெண்டிங்

தொடர் முகூர்த்தங்கள்- பட்டுச்சேலை விற்பனை மும்முரம்!

 

தை, மாசி மாதங்களில் அடுத்தடுத்து 15 முகூர்த்தங்கள் வருகிறது. இதன் காரணமாக, சேலம் சரகத்தில் பட்டுச்சேலைகள் விற்பனை களைகட்டியுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

நடப்பாண்டில் வரும் ஜனவரி 19- ஆம் தேதி முதல் முகூர்த்தம் வருகிறது. அதனை தொடர்ந்து, ஜன.20, 26, 31 மற்றும் பிப்ரவரி 02, 03, 10 ஆகிய முகூர்த்தங்கள் தை மாதமும், பிப்ரவரி 16, 17, 19, 23, மார்ச் 02, 03, 09, 12 ஆகிய முகூர்த்தங்கள் மாசி மாதத்திலும் வருகிறது. 

இந்த முகூர்த்த நாட்களையொட்டி, பட்டுச்சேலைகள், ஜரிகைச்சேலைகள் பல ராகங்களில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. திருமண நிச்சயித்தோர் மணப்பெண்ணை அழைத்து வந்து அவர்களுக்கு பிடித்து பட்டுச் சேலைகளைத் தேர்வு செய்தனர். 

அந்த வகையில் நேற்று (ஜன.17) வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள பட்டுச்சேலை கடைகளில் திருமண கோஷ்டியினரின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. அதேபோல், இளம்பிள்ளை, பஞ்சுக்காளிப்பட்டி, சிந்தாமணியூர், ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியிலும் திருமண கோஷ்டியினரின் கூட்டம் காணப்பட்டது. 

ஒரு மாதத்திற்கு பிறகு வியாபாரம் சூடுப்பிடித்துள்ளதால் சேலம் மாவட்டத்தில் பட்டுச்சேலை ரகங்களை உற்பத்திச் செய்யும் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.