ட்ரெண்டிங்

மேட்டூர் அருகே உலா வரும் சிறுத்தை? – விவசாயிகள் கலக்கம்

 

மேட்டூர் அருகே சிறுத்தை நடமாட்டம் – பொதுமக்கள் பீதி

மேட்டூர்: 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கண்ணாமூச்சி வனப்பகுதியையொட்டியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கண்ணாமூச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை வனப்பகுதியை ஒட்டியுள்ள பாறை மீது சிறுத்தை ஒன்று நடமாடியதாகக் கூறப்படுகிறது. இதனை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சிறுத்தை இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து கால்நடைகளை தாக்கக்கூடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியையொட்டி வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

மேலும், கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளும் தங்களது கால்நடைகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து, அதன் இருப்பிடத்தை கண்டறிய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக சிறுத்தையை பாதுகாப்பாக பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கான நடவடிக்கைகளை வனத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.