சேலம் அடுத்த வீராணம் சுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கவிராஜன். இவரது மனைவி அமுதா (வயது 36). கடந்த 2014- ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அமுதா குப்பையைக் கொட்டியுள்ளார். இதற்கு அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரிசீயன் சிவக்குமார் (வயது 53) என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அப்போது அங்கு வந்த சிவக்குமாரின் மனைவி செல்வி, மாமியார் தனம், மனைவியின் தம்பி சதீஸ்குமார் ஆகியோர் அமுதாவுடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், அமுதாவை சரமாரியாகத் தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வீராணம் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவுச் செய்து சிவக்குமார், செல்வி, தனம், சதீஸ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, சிவக்குமாருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூபாய் 2,000 அபராதமும் விதித்து நேற்று உத்தரவிட்டார். மற்ற 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.


