ட்ரெண்டிங்

மேட்டூர் அணைக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்! 

வருகின்ற ஆகஸ்ட் 03- ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் காவிரி கரையோரங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டம். மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியில் உள்ள நிலையில், தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தற்போதைய நிலவரப்படி அணைக்கு வரும் 1.7 இலட்சம் கன அடி நீரும் உபரி நீர் மேட்டூர் அணையின் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளதையொட்டி வருவாய்த்துறை, நீர்வளத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதோடு ஒலிப்பெருக்கி, தொலைக்காட்சி, சமூக ஊடகம், செய்தித்தாள்கள் வாயிலாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வருகின்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மேட்டூர் அணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காவிரி கரையோர பகுதிகளுக்கு வருவதை பாதுகாப்பு நலன் கருதி தவிர்த்திட வேண்டும். குறிப்பாக, ஆடிப்பெருக்கு விழாவினையொட்டி, பாதுகாப்பு நலன் கருதி காவிரி ஆற்றில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் நீரில் இறங்கி குளித்தல், நீச்சல் அடித்தல், மீன் பிடித்தல், கால்நடைகளை குளிப்பாட்டுதல், புகைப்படங்கள் எடுத்தல், காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற நடவடிக்கைகளை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.

மேலும், நீர்நிலை அருகில் குழந்தைகள் செல்லாமல் இருப்பதை பெற்றோர்கள் கவனமாகக் கண்காணித்து பாதுகாப்புடன் இருக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.