பால் கொள்முதல் விலை உயர்வு போதாது – 24ஆம் தேதி பால் நிறுத்த போராட்டம் தொடரும்
சேலம்: பால் கொள்முதல் விலையை தமிழக அரசு ரூ.3 மட்டுமே உயர்த்தியிருப்பது போதுமானதாக இல்லை என்றும், திட்டமிட்டபடி வரும் 24ஆம் தேதி முதல் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவர் பெரியண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. ஏற்கனவே பால் கொள்முதல் விலை ரூ.35 மற்றும் ஊக்கத்தொகை ரூ.3 என மொத்தம் ரூ.38 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும் ரூ.3 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் அதிக கொள்முதல் விலை வழங்குவதால் ஏற்கனவே ஏராளமான ஆவின் பால் உற்பத்தியாளர்கள் தனியாரிடம் சென்றுவிட்டனர். தற்போதைய விலை உயர்வு போதுமானதாக இல்லாததால் மீதமுள்ள விவசாயிகளும் தனியாரிடம் செல்லும் நிலை ஏற்படும். இதனால் ஆவின் கூட்டுறவு நிறுவனம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மேலும், ஆவின் நிர்வாகம் வழங்கும் கால்நடைத் தீவனத்தின் விலையும் உயர்ந்துள்ளதுடன், போதிய அளவில் கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் தனியாரிடம் அதிக விலைக்கு தீவனம் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வறட்சி காரணமாக பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அரசு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால், எதிர்காலத்தில் விவசாயத்தையும், உணவு உற்பத்தியையும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்படும் என அவர் கூறினார்.
தனியார் நிறுவனங்கள் பாலை அதிக விலைக்கு கொள்முதல் செய்து வரும் நிலையில், அரசு அறிவித்துள்ள விலை உயர்வு போதுமானதாக இல்லை. எனவே, திட்டமிட்டபடி வரும் 24ஆம் தேதி முதல் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் பெரியண்ணன் தெரிவித்தார்.



-SXgDfGgJfO.jpg)