ஆடிப்பெருக்கு விழா: வீரபத்திரன் சுவாமிக்கு தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஆத்தூர், ஆக. 3:
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே கொண்டையம்பள்ளி கிராமத்தில் உள்ள வீரபத்திரன் சுவாமி கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழாவையொட்டி குருமன்ஸ் இனத்தைச் சேர்ந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், ஊரணி பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்திய நூதன வழிபாடு நடைபெற்றது.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு இத்திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆடி மாதம் முதல் நாளிலிருந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
விழாவையொட்டி சுவேத நதியில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்து வீரபத்திரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, பின்னர் சுவாமி ஊரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் நடைபெற்ற நேர்த்திக்கடன் நிகழ்ச்சியில், திருமணத் தடை நீங்கவும், குழந்தைப் பாக்கியம் கிடைக்கவும், தீய சக்திகள் விலகவும் வேண்டி 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்களின் தலையில் கோவில் பூசாரி தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினார். தேங்காய் சிதறும் போது பக்தர்களின் துன்பங்களும் சிதறி நீங்கும் என்பது அப்பகுதி மக்களின் ஐதீக நம்பிக்கையாகும்.
முன்னதாக பக்தர்கள் வீரபத்திரன் சுவாமிக்கு ஊரணி பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். ஆடிப்பெருக்கு திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து வழிபட்டனர்.



-hcTFAGMRGb.jpg)