ட்ரெண்டிங்

சேலத்தில் ஏசி வசதியுடன் புதிய ரயில் பெட்டி உணவகம்!

 

சேலத்தில் புதிதாக திறக்கப்பட்ட ரயில் பெட்டி உணவகம் – பொதுமக்கள் கவனம் ஈர்ப்பு

சேலம்:

சேலம் அயோத்தியாபட்டினம் ரயில் நிலையம் அருகே தென்னக ரயில்வே சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டி உணவகம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அயோத்தியாபட்டினம் ரயில்வே கேட் பகுதியில் இருந்து அரூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், சேலத்தில் இருந்து விருத்தாசலம், கடலூர், சென்னை எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தினசரி ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அயோத்தியாபட்டினம் ரயில்வே கேட் பகுதியில் உணவகம் அமைக்க தென்னக ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, ரயில்வே நிர்வாகம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து "கேரளா ஃபுட் எக்ஸ்பிரஸ்" என்ற பெயரில் புதிய உணவகத்தை தொடங்கியுள்ளது.

இந்த உணவகத்தை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னாலால் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

உணவகத்தில் டீ, காபி, ஐஸ்கிரீம் வகைகள், நூடுல்ஸ், கிரில் சிக்கன், சவர்மா உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களின் வசதிக்காக இந்த உணவகம் 24 மணி நேரமும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ரயில் பெட்டிக்குள் ஏசி வசதியுடன் நவீன முறையில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளதால், அயோத்தியாபட்டினம் பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி அவ்வழியாக செல்லும் பயணிகளிடையேயும் இந்த புதிய உணவகம் வரவேற்பை பெற்றுள்ளது.