மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு சட்டத்தை மதிக்கவில்லை – சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு
சேலம், ஜூலை 31:
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு சட்ட விதிமுறைகளை மதிக்காமல் செயல்பட்டு வருவதாகவும், தமிழ்நாட்டுக்கான உரிமை நீர் முறையாக வழங்கப்படவில்லை என்றும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி குற்றம்சாட்டினார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார். இதற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவிரி படுகையில் எந்தவித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்ற தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் மேகதாது அணை தொடர்பாக முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாகவும், கடைமடை மாநிலங்களின் கருத்து கேட்கப்பட வேண்டும் என்ற சட்டநிலையை மீறி, அனுமதி தேவையில்லை என்று மத்திய அமைச்சரின் பதில் வந்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
எந்த நதிப் படுகையிலும் அணை அல்லது கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும்போது கடைமடை மாநிலங்களின் ஒப்புதல் அவசியம் என வலியுறுத்திய அவர், நாடாளுமன்றத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், “மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதா?” என்று கேள்வி எழுப்பியதாக குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு மற்றும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும், கர்நாடக அரசு ஏற்கனவே காவிரி ஆற்றின் மீது பல அணைகளை கட்டியுள்ளதாகவும், காவிரியில் ஆண்டுதோறும் கிடைக்கும் 750 டி.எம்.சி. நீரில் தமிழ்நாட்டிற்கு உரிமையாக வழங்கப்பட வேண்டிய நீர் தொடர்ந்து குறைக்கப்பட்டுள்ளதாகவும் சௌமியா அன்புமணி குற்றம்சாட்டினார்.
உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் மற்றும் மத்திய அரசின் உத்தரவுகளை கர்நாடக அரசு முழுமையாக மதிப்பதில்லை என்றும், அணைகள் நிரம்பிய பிறகு உபரி நீரையே தமிழ்நாட்டிற்கு திறந்து விடுகின்றனர்; உரிமை நீர் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“தமிழ்நாட்டிற்கு உரிமையான காவிரி நீரை வழங்க வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சிகளின் கூட்டத்தையும் உடனடியாக கூட்ட வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்,”என்றும் சௌமியா அன்புமணி கூறினார்.



