அம்பேத்கர் சிலை விவகாரம்: கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்கக் கோரி சேலம் ஆட்சியரிடம் பெண்கள் மனு
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு விவகாரத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும், காவல்துறையினர் கிராம மக்களை அச்சுறுத்துவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
அம்பேத்கர் சிலை திறப்பு தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட தலித் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து, அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கை பேணும் வகையில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்க வேண்டும், ஒதியத்தூர் கிராம மக்கள் அச்சமின்றி இயல்பு வாழ்க்கை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், நீலம் பண்பாட்டு மையத்தின் பொதுச் செயலாளர் உதயா தலைமையில் பெண்கள் குழு சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெண்கள், “எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டின் முன்பும் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவும், வெளியூர் சென்று மீண்டும் ஊருக்கு திரும்பவும் அச்சப்படும் சூழல் நிலவுகிறது. தொடர்ந்து சோதனை நடத்தி காவல்துறையினர் அச்சுறுத்துகின்றனர். மேலும் பல இளைஞர்களை கைது செய்வோம் என எச்சரித்ததால், பலர் ஊருக்கு வராமல் வெளியிலேயே தங்கி வருகின்றனர்” என்றனர்.
மேலும், “கர்ப்பிணிப் பெண்களுக்குக் கூட பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டு சிறையில் இருப்பது போன்ற சூழலை காவல்துறையினர் உருவாக்கியுள்ளனர். படித்த இளைஞர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை ரத்து செய்து, கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும். அம்பேத்கர் சிலையை தமிழக அரசே திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.



-hcTFAGMRGb.jpg)