ட்ரெண்டிங்

சேலத்தில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால சூலக்கல்!

 

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டியில் பெருந்தலைவர் காமராசர்

நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் உள்ளது. இந்த மன்றத்தின் தலைவராக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், செயலாளராக ஆசிரியர் அன்பரசி, மன்ற உறுப்பினராக பள்ளி மாணவர்கள் உள்ளனர்.

 

இந்த நிலையில், களப்பயணம் மேற்கொண்ட தொன்மை பாதுகாப்பு மன்ற உறுப்பினர்கள், மாணவர்கள் கொடுத்த தகவல்படி, பள்ளியின் அருகில் உள்ள காட்டில் பழமையான கல்லை ஆய்வுச் செய்தனர். அது, 17- ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால சூலக்கல் எனக் கண்டறியப்பட்டது.

 

இதுகுறித்து பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற செயலாளர் அன்பரசி கூறுகையில், "பள்ளி மாணவர்களுடன் கள ஆய்வு செய்த போது, 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால சூலக்கல் என்பது தெரிய வந்தது. இந்த சூலக்கல் 3 அடி உயரம், 1 அடி அகலம் கொண்ட வெள்ளை கல்லால் ஆனது. இந்த கல்லின் நடுவில் திரிசூலம் போன்ற அமைப்பும், அதன் இருபுறமும் சூரியன், சந்திரன் போன்ற அமைப்பும் உள்ளது.

 

கோயிலுக்கோ அல்லது வேறு எதற்காவது தானம் கொடுத்ததற்காக வைக்கப்பட்டது தான் இந்த சூலக்கல். இதன் பொருள் சூரியன், சந்திரன் உள்ளவரை இந்த தானம் நிலைத்து இருக்கும் என்பதாகும். இதில் திரிசூலம் போன்ற அமைப்பு இருப்பது நாயக்கர் காலத்தை குறிப்பதாகும்.