ட்ரெண்டிங்

விஜய் அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி !

 

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்தல் தோல்வி உட்கட்சி பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக பேசி உள்ளார்.

தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

தமிழக அரசின் செயல்பாடு, காவிரி விவகாரம் மற்றும் அரசியல் சூழல் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், 2011 முதல் 2026 வரை நடைபெற்ற தேர்தல்களில் சேலம் மாவட்டத்தில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று, அந்த மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக இருப்பதாக கூறினார்.

தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறதா என்றே சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களின் பிரச்சினைகளுக்கு முதலில் குரல் கொடுப்பது அதிமுகதான் என்றும் கூறினார்.

காவிரி நீர் விவகாரத்தில் அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பை பெற்றுத் தந்ததாக குறிப்பிட்ட அவர், தற்போது அரசின் நடவடிக்கைகளால் அந்த தீர்ப்புக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் விவசாயிகளிடையே நிலவுவதாக தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் நடுவர் மன்றம் அமைப்பது தேவையற்றது என்றும் அவர் கூறினார்.

கரூரில் முதலமைச்சர் விஜய், திமுகவும் அதிமுகவும் "கூட்டு களவானிகள்" என்று விமர்சித்ததற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து தனது கட்சியில் இணைத்துக்கொண்டவர் முதலமைச்சர் விஜய்தான் என குற்றம்சாட்டினார். மேலும், 60 நாட்கள் ஆட்சியில் இருந்த நிலையில் அரசு செய்த சாதனை என்ன என்பதை விளக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.

முதல்வரின் பேச்சு பொறுப்பான அரசியல் தலைவருக்குரியதாக இல்லை என்றும், தேர்தலுக்கு முன்பும் பின்னரும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் அவர் விமர்சித்தார். இரண்டு திராவிடக் கட்சிகளையும் எதிர்த்து பேசிய விஜய், தற்போது அதே திராவிடக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில்தான் ஆட்சி நடத்தி வருவதாகவும் கூறினார்.

மேலும், திமுக-அதிமுக இணைந்து ஆட்சியைப் பிடிக்க முயன்றதாக கூறப்படுவது கட்டுக்கதை என்றும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பரிதாபகரமான நிலையில் இருப்பதாகவும் விமர்சித்தார். 

சினிமாவில் பணியாற்றியவர்களுக்கு அரசு பதவிகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், அரசின் செயல்பாடு சினிமா போல கேலிக்கூத்தாக மாறிவிட்டதாகவும் தெரிவித்தார்.