ட்ரெண்டிங்

வார விடுமுறையையொட்டி, மேட்டூரில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

வார விடுமுறையையொட்டி, மேட்டூரில் அலைமோதிய மக்கள் கூட்டம்! 

சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்று மேட்டூர் அணை. அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் சேலம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள மக்கள் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் மேட்டூர் அணைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். 

அந்த வகையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், காலை முதலே பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்து, முனியப்பனை வழிபட்டனர். அதேபோல், பொங்கலிட்டு ஆடு, கோழிகளைப் பலியிட்டு, முனியப்பனை வழிபட்டு தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். அத்துடன், இறைச்சிகளை அங்கேயே சமைத்து, குடும்ப உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விருந்து வைத்து அசத்தினர். 

குடும்ப பெரியவர்கள் மேட்டூர் அணை பூங்காவில் ஒன்று கூடி அமர்ந்து கலகலக்கப்பாகப் பேச, சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து, அணையின் வலதுக்கரை பகுதியில் உள்ள பவள விழா கோபுரத்திற்கு சென்று அணையின் முழு தோற்றத்தையும் கண்டு ரசித்தனர். 

சுற்றுலாப் பயணிகளின் வருகைக் காரணமாக, மீன் வியாபாரம் ஜோராக நடைபெற்றதாக, வியாபாரிகள் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர். அதேபோல், நாளை முதல் சேலத்தில் ஆடித் திருவிழா கொண்டாடப்படவுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகமாக இருக்கும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.