தமிழக முதல்வர் அறிவித்த பயிர் கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளை ஏமாற்றும் வகையில் உள்ளதாகவும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் Thangaraj தலைமையில் விவசாயிகள் குழுவினர் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, 5 ஏக்கருக்கு உட்பட்ட விவசாயிகளின் பயிர் கடன்களை 100 சதவீதம் தள்ளுபடி செய்வதுடன், பெரிய விவசாயிகளுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்பில், விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே கடன் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் வாக்குறுதியை நம்பி விவசாயிகள் இந்த அரசுக்கு ஆதரவு அளித்த நிலையில், தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பு நம்பிக்கையை சிதைத்துள்ளதாகவும், எனவே அரசு தனது அறிவிப்பை மறுபரிசீலனை செய்து தேர்தல் வாக்குறுதியின்படி முழுமையான பயிர் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்றும், புதிய பயிர் கடன்களையும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில தலைவர் தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“தேர்தலின்போது கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட அனைத்து பயிர் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. மாநில அளவில் சுமார் ரூ.12 ஆயிரம் கோடி பயிர் கடனில் வெறும் ரூ.2 ஆயிரம் கோடி மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது,” என்றார்.
மேலும், “விவசாயிகள் தொடர்ந்து சாகுபடி செய்ய புதிய பயிர் கடன்கள் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்,” என்றும் எச்சரித்தார்.
அதேபோல், ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டிய சூழ்நிலை உள்ள நிலையில், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், கர்நாடக அரசு காவிரியில் மேகதாது அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி ஒருமித்த முடிவெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த சந்திப்பின்போது மாநில பொதுச் செயலாளர் செல்லமுத்து, மாவட்ட தலைவர் தங்கவேல், ஒன்றிய தலைவர் சுரேஷ், செயலாளர் வெங்கடேஷ், பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


