ட்ரெண்டிங்

சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்தவரால் பரபரப்பு!

 

சேலம் மத்திய பேருந்து நிலையம் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் பரபரப்பாகக் காணப்படும். இந்த நிலையில், நேற்று (நவ.02) காலை 11.00 மணியளவில் பேருந்து நிலையத்தின் திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக பள்ளப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அந்த நபர் தண்ணீர் ஊற்றி எழுப்ப முயன்றனர். இருப்பினும், அவர் எழாத நிலையில், விரைந்த வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், அவரை பரிசோதித்ததில் ஏற்கனவே உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து, உடலை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், உயிரிழந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என்பவைக் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் காரணமாக, சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.