ட்ரெண்டிங்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க கோரி சேலத்தில் மனு !

 

டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க கோரி மனுகோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தொடர் போராட்டம் என எச்சரிக்கை

சேலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகள் அண்மையில் அரசால் மூடப்பட்டன. இந்த கடைகளில் பணியாற்றி வந்த பணியாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

எனவே, மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களையும் அரசின் பிற துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தனியார் முகமை மூலம் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதேபோல், அரசு உத்தரவின்படி மதுபான கடைகள் இரவு 10 மணிக்கு மூடப்பட்டாலும், விற்பனை கணக்குகளை சரிபார்த்து கடையை பூட்டி வெளியேற ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்த கோரிக்கைகளை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நிறைவேற்றாவிட்டால், சேலம் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கைகள் அடங்கிய மனுவை சேலம் மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினரும் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கினர்.