ட்ரெண்டிங்

லாரிகள் வேலை நிறுத்தம்- லீபஜாரில் அணி வகுத்து நிற்கும் லாரிகள்!


தமிழகம் முழுவதும் லாரி உள்ளிட்ட சரக்கு வாகன உரிமையாளர்கள் இன்று (நவ.09) ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாலை வரியைக் குறைக்க வேண்டும், ஆன்லைன் மூலம் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வழக்குப்பதிவுச் செய்வதைக் கைவிட வேண்டும், மூடப்பட்ட மணல் குவாரிகளைத் திறக்க வேண்டும் காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் உள்ளிட்டவை சரக்கு வாகன உரிமையாளர்களின் கோரிக்கையாகும்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று (நவ.09) காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 12 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்தத்தால் 5 லட்சம் லாரிகள், 20 லட்சம் இலகுரக வாகனங்கள் சரக்கு ஆட்டோக்கள், டேங்கர் லாரிகள் மற்றும் டூரிஸ்ட் வேன்கள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால், சேலம் மாநகரில் முக்கிய வணிக பகுதியான லீ பஜாரில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், செவ்வாய்ப்பேட்டை, பால்மார்க்கெட் பகுதிகளுக்கு சரக்குகளை கொண்டு வரும் லாரிகள் வராததால், எப்போதும் பரபரப்பாக இருக்கும் அந்த பகுதி தற்போது வெறிச்சோடி உள்ளது.

இன்று நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால், செவ்வாப்பேட்டை, லீ பஜாரில் சுமார் பல லட்சம் மதிப்பிலான வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலைத் தெரிவித்துள்ளனர். தீபாவளிக்கு பண்டிக்கைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுமார் 1 கோடிக்கும் மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவிதுள்ளது.