ட்ரெண்டிங்

ஜூன் 12 மேட்டூர் நீர் திறப்பு: ஜி.கே.வாசன் கோரிக்கை !

 

 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்,ஜி.கே வாசன், ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீரை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :-

டெல்டா விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை விளங்குவதாக தெரிவித்தார். ஜூன் – ஜூலை மாதங்களில் தொடங்கும் குறுவை சாகுபடி செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நிறைவு பெறுவதற்கு தென்மேற்கு பருவமழையும், மேட்டூர் அணை நீரும் மிகவும் அவசியம் என கூறினார்.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் நடைபெறும் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை நீர் முக்கிய ஆதாரமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், விவசாயிகளின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு, ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும், டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும் காவிரி நீர் இன்றியமையாதது என்றும் அவர் வலியுறுத்தினார்.