ட்ரெண்டிங்

4 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!..

 

 நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயருமா என்ற அச்சம்..

இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக மாற்றமின்றி இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு ரூ.3-க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ள இந்த விலை உயர்வு, பொதுமக்கள் மற்றும் தொழில் துறைகளில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.14 உயர்ந்து ரூ.103.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.11 உயர்ந்து ரூ.95.50 ஆகியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டாலரை தாண்டியிருப்பதே இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக, உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தபோதும், இந்தியாவில் சில்லறை விலை உயர்த்தப்படாமல் இருந்ததால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் 88 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதியையே நம்பியிருப்பதால், சர்வதேச சந்தை மாற்றங்கள் நேரடியாக இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

டீசல் விலை உயர்வால் லாரி போக்குவரத்து கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பால், காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

 மேலும், ஜவுளி, ரசாயனம் மற்றும் உலோகத் தொழில்களிலும் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஏற்கெனவே நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த எரிபொருள் விலை உயர்வு மே மற்றும் ஜூன் மாதங்களில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நரேந்திர மோடி பேசியபோது, “எரிபொருள் பயன்பாட்டை குறைப்பது இன்றைய காலத்தின் அவசியம். வீட்டிலிருந்து வேலை செய்வது, ஆன்லைன் ஆலோசனைகள் போன்ற நடைமுறைகளை மக்கள் மீண்டும் பின்பற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் குறைந்து, ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் வழக்கநிலைக்கு திரும்பினால் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.