ட்ரெண்டிங்

இன்ஸ்டா ரீல்ஸ் ஆட்சி வேண்டாம்.. ரியல் ஆட்சி நடத்துங்கள்!..

 

பேரவையில் முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்…

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசை கடுமையாக விமர்சித்தார்.

பேரவையில் பேசிய அவர், “4.93 கோடி வாக்குகளில் 1.72 கோடி வாக்குகள் மட்டுமே ஆளுங்கட்சிக்கு கிடைத்துள்ளது. மீதமுள்ள 3.21 கோடி மக்கள் இந்த அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 65 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை குறைந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

மேலும், முதல்வர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ததை சுட்டிக்காட்டிய உதயநிதி, “அந்த தொகுதி மக்களுக்கு இதுவரை நன்றி கூட தெரிவிக்கப்படவில்லை” என்று விமர்சித்தார்.

தவெக அரசு, திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன்தான் அமைந்துள்ளதாகவும், குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காக மட்டுமே சில கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்கியதாகவும் அவர் கூறினார். “இப்போதும் அந்த கட்சிகள் திமுக கூட்டணியில்தான் இருப்பதாக கூறி வருகின்றன” என்றும் குறிப்பிட்டார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் சில எம்எல்ஏக்கள் ஆதரவு வழங்கிய விவகாரம் குறித்தும் அவர் மறைமுகமாக தாக்குதல் நடத்தினார். “மாற்றம் என்று பேசினீர்கள். ஆனால் அதன் பின்னால் அரசியல் பரிமாற்றங்கள் நடக்கின்றன என்ற சந்தேகம் மக்களிடம் உருவாகியுள்ளது” என்றார்.

மேலும், “திமுக கூட்டணி மற்றும் சில கட்சிகளிடம் இருந்து எம்எல்ஏக்களை கடன் வாங்கி ஆட்சி நடத்தும் நிலை உருவாகியுள்ளது. பெரும்பான்மை இல்லாத இந்த அரசு நல்லாட்சியை வழங்குமா என்ற சந்தேகம் மக்களிடம் உள்ளது” என்றும் உதயநிதி தெரிவித்தார்.

மகளிர் உரிமைத்தொகை, காலை உணவுத் திட்டம் மற்றும் புதுமைப் பெண் திட்டங்கள் தொடர வேண்டும் என வலியுறுத்திய அவர், “மக்கள் காத்திருக்கிறார்கள். அவர்களை நீண்ட நாட்கள் காத்திருக்க வைக்காதீர்கள். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல், மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் உண்மையான ஆட்சியை நடத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு” என்று அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்ற கழகம் உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனர்.