நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எதிர்ப்பு… திமுக வெளிநடப்பு..
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக வாக்களிப்பதாக எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். சட்டப்பேரவையில் பேசிய அவர், “தவெக அரசுக்கு 65 சதவீத மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
மேலும், அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதையும், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஏழை மாணவர்களின் கல்விச் செலவையும் அதிமுக அரசு ஏற்றதாகவும் குறிப்பிட்டார்.
அதிமுகவில் வெற்றி பெற்ற 47 எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக கூறி ஆளுங்கட்சியினர் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி நடைபெறுவதாக தகவல்கள் வருவதாகவும், “தூய அரசியல்” பேசும் முதல்வர் விஜய் இதனை அனுமதிக்கக் கூடாது என்றும் பழனிசாமி தெரிவித்தார்.
இதற்கிடையில், திராவிட முன்னேற்ற கழகம் நம்பிக்கை வாக்கெடுப்பிலிருந்து வெளிநடப்பு செய்தது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “குதிரை பேரம் மூலம் ஆட்சியை தக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது” என குற்றம்சாட்டினார். மேலும், மகளிர் உரிமைத்தொகை, காலை உணவுத் திட்டம் மற்றும் புதுமைப் பெண் திட்டங்கள் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முன்னதாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக அரசு அமைந்தது.
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததன் மூலம் தவெகவின் பலம் 120 ஆக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 10-ம் தேதி விஜய் தமிழக முதலவராக பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில், முதல்வர் ஜோசப் விஜய் உட்பட 233 எம்எல்ஏக்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.



-hcTFAGMRGb.jpg)