பெண்களுக்கான புதிய பாதுகாப்பு திட்டம்…
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ என்ற புதிய காவல் பிரிவை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இந்தப் படை நேரடியாக முதல்வர் ஜோசப் விஜய் கண்காணிப்பில் செயல்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு விஜய் கையெழுத்திட்ட முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் அதிநவீன வசதிகளுடன் இந்த சிறப்பு படை செயல்பட உள்ளது.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்தப் படையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் வகையில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் மீது உடனடி கண்காணிப்பும் மேற்கொள்ளப்படும்.
பெண்களிடமிருந்து வரும் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தேவையான உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக நலத்துறை மற்றும் கல்வித்துறையுடன் இணைந்து பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.
இந்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ டிஜிபி அலுவலகத்தின் கீழ் செயல்படும். ஐஜி தலைமையில் இயங்கும் இந்தப் பிரிவில் எஸ்பி, டிஎஸ்பி, ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உட்பட 36 பேர் இடம்பெறவுள்ளனர்.
பெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டம் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.



