ட்ரெண்டிங்

மேட்டூர் நீருக்காகக் காத்திருக்கும் விவசாயிகள்! 

மேட்டூர் அணையில் இருந்து இந்தாண்டு குறுவைச் சாகுபடிக்காக நீர் திறக்கப்படாததால் அதை நம்பி இருந்த விவசாயிகள் தவித்து வருகின்றனர். தமிழக அரசின் வழிகாட்டுதல்களை எதிர்நோக்கிக் காத்திருக்கும் விவசாயிகளின் நிலை குறித்த தொகுப்பை விரிவாகப் பார்க்கலாம். 

நாகை மாவட்டத்தில் 25,000 ஏக்கர் பரப்பளவில் குறுவைச் சாகுபடி நடைபெறும். கடந்த ஆண்டு குறுவைச் சாகுபடிக்கு தண்ணீர் சரியான காலத்தில் கிடைத்த நிலையில், சுமார் 1 லட்சம் ஏக்கர் அளவில் குறுவைச் சாகுபடி நடைபெற்றது. ஆனால், நடப்பாண்டில் மேட்டூர் அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததாலும், அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதாலும் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதனால் 4 லட்சம் ஏக்கர் விவசாய பரப்பை சாகுபடி செய்யாமல் கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளன. தாங்கள் குறுவைச் சாகுபடிக்கு தயாராக உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகமும், வேளாண் துறையும் குறுவைச் சாகுபடிக்கான எந்த ஆயத்தப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை என வேதனையுடன் விவசாயி தெரிவித்துள்ளார். 

மேட்டூர் அணை திறக்கப்படாததைக் கண்டித்து வரும் ஜூன் 17- ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக  அறிவித்துள்ள நிலையில், மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் ஜூன் 12- ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்க இயலாது என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.