தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்ற விஜய், தனது முதல் நாள் உரையிலேயே அமைச்சர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக தமிழ்நாட்டில் புதிய முதலமைச்சர்கள் பதவியேற்ற பிறகு தலைமைச் செயலகத்திற்கு சென்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவது வழக்கம். ஆனால் அதற்கு மாறாக நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழா மேடையிலேயே 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான மூன்று முக்கிய கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், மாநில அரசின் தற்போதைய நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் தவெக மற்றும் தனது அரசியல் பயணம் குறித்து முன்வைக்கப்பட்ட பல்வேறு விமர்சனங்களுக்கும் மறைமுகமாக பதிலடி கொடுத்தார்.
அதன் பின்னர் அமைச்சர்களை நோக்கி பேசிய முதலமைச்சர் விஜய், “மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட நான் தொடமாட்டேன். எனக்கு அதில் அவசியமும் இல்லை. இந்த விஜய் தப்பு பண்ணமாட்டான். தப்பு செய்யவும் விடமாட்டான். அது யாராக இருந்தாலும் சரி, என்னுடன் இருப்பவர்களாக இருந்தாலும் விடமாட்டேன்” என்று கடுமையாக எச்சரித்தார்.
மேலும், “வெற்றி பெற்றுவிட்டோம், இனி ஒரு ஆட்டம் ஆடலாம் என்ற எண்ணம் யாருக்காவது இருந்தால், இந்த நிமிடமே அந்த எண்ணத்தை துடைத்து எறிந்துவிடுங்கள்” என கூறியதும் அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.
தொடர்ந்து, “இங்கு ஒரே மையம் தான். என் தலைமையிலான மையம் தான். ஒரு பவர் சென்டர், இன்னொரு பவர் சென்டர் என்றெல்லாம் எதுவும் கிடையாது” என்று கூறி கட்சிக்குள் அதிகார மையங்கள் உருவாக இடமில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.
இறுதியாக பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் நலனுக்காக தவெக அரசு செயல்படும் என்றும், “இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் அனைவருக்குமான முகம் தான் விஜயின் முகம்” என தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜயின் இந்த முதல் நாள் உரை தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.


-SXgDfGgJfO.jpg)