ட்ரெண்டிங்

தமிழ்நாடு அரசின் நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்” - முதலமைச்சர் விஜய் !

 

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், சிடிஆர் நிர்மல்குமார், டி.கே.பிரபு, கீர்த்தனா, அருண்ராஜ், வெங்கட் ரமணன் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

சென்னையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்கு பிறகு மேடையிலேயே 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட 3 முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.

இதனைத் தொடர்ந்து மக்களிடம் உரையாற்றிய விஜய், “சினிமாவில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று போராடிய ஒரு உதவி இயக்குநரின் மகன் நான். எனக்கும் வறுமை, பசி என்றால் என்ன என்பது தெரியும். நான் மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை. உங்க குடும்பத்தில் இருந்து வந்த ஒருவன் தான்” என்று உருக்கமாக தெரிவித்தார்.

மேலும், “சினிமாவில் நீங்கள் கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிக்கடன் செலுத்த அரசியலுக்கு வந்த என்னை, ‘நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று ஏற்றுக்கொண்டீர்கள். இந்த அரசியல் பயணத்தில் எனக்கும் உங்களுக்கும் பல கஷ்டங்களும் அவமானங்களும் ஏற்பட்டது. ஆனாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் ஒன்றும் தேவதூதன் இல்லை. சாதாரண வாழ்க்கை வாழ்பவன். பொய் வாக்குறுதிகள் கொடுக்க மாட்டேன். எது முடியுமோ அதை மட்டுமே செய்வேன்” என்று கூறினார்.

அதேபோல் தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்தும் கருத்து தெரிவித்த விஜய், “கஜானாவை சுத்தமாக துடைத்து வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலைமையில்தான் தவெக அரசு பொறுப்பேற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் உண்மையான நிலைமை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்” என தெரிவித்தார்.

இறுதியாக, “நான் சொன்ன வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவேன். கொஞ்சம் அவகாசம் மட்டும் கொடுங்கள். இது உங்கள் ஆட்சி” என்று மக்களிடம் உறுதியளித்தார்.

முதலமைச்சர் விஜயின் இந்த உரை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.