ட்ரெண்டிங்

முழு அடைப்பு காரணமாக, சேலத்தில் இருந்து ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படும் பேருந்துகள்!

தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், கன்னட அமைப்புகள் சார்பில் இன்று (செப்.26) முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பிற்கு ஆளும் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

 

இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு தனியார் வாகனங்கள் சங்கம், உணவக உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவுத் தெரிவித்துள்ளனர்.

 

இதன் காரணமாக, தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் மாநில எல்லையான ஜூஜூவாடிக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன.

 

குறிப்பாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்தில் இருந்து பெங்களூருவுக்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்று (செப்.26) சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்படும் பேருந்துகள் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. அதேபோல், ஓசூரில் இருந்து சேலத்திற்கு தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

 

எனினும், பெங்களூருவுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். ஓசூர் பேருந்து நிலையம், தமிழக- கர்நாடக எல்லைகளில் தமிழக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.