ட்ரெண்டிங்

விஜய் பதவியேற்பு விழாவை புறக்கணித்த திமுக - அதிமுக..! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு !

 

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற விழா அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக இந்த விழாவில் திமுக மற்றும் அதிமுக சார்பாக எந்த முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வந்த திமுக - அதிமுக அரசியலுக்கு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றிய தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும் தனித்து ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத காரணத்தால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைத்துள்ளார்.

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆனால் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் யாரும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுக அரசு பதவியேற்ற போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டிருந்தார். அதேபோல் 2021ஆம் ஆண்டு திமுக அரசு பதவியேற்றபோது அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிலையில் தவெக அரசு பதவியேற்ற நிகழ்வை திமுக மற்றும் அதிமுக புறக்கணித்தது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தவெக சார்பில் முறையான அழைப்பு விடுக்கப்படவில்லையா? அல்லது அரசியல் காரணங்களால் திட்டமிட்டே பங்கேற்காமல் இருந்தார்களா? என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.