ஆன்மிகம்

ஆடிப்பெருக்கு பண்டிகை- மேட்டூர் அணையில் புனித நீராடிய மக்கள்!

ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி, நீர்நிலைகளில் பொதுமக்கள், தம்பதிகள் புனித நீராடி சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். காவிரி கரையோர மாவட்டங்களான சேலம், திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 03) அதிகாலை முதலே புதுமணத் தம்பதிகள் தாலிப்பெருக்கு நடத்தி சிறப்பு வழிபாடு செய்தனர். 

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான மேட்டூர் அணையின் அடிவாரம் பகுதியில், புதுமணத் தம்பதிகள், காவிரி ஆற்றில் தலையில் அருகம்புல், நாணயம் வைத்து மூழ்கி புனித நீராடி காவிரி அன்னையை வழிபட்டனர். 

சேலம் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் புனித நீராட மேட்டூர் அணைக்கு வந்த வண்ணம் உள்ளனர். சுமார் 200- க்கும் மேற்பட்ட காவல்துறையினர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் கழிவறைகள், உடை மாற்றும் அறைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. 

ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் குளிப்பவர்கள் தவறும் பட்சத்தில் அவர்களைக் காப்பாற்றி முதலுதவி செய்யும் வகையில், ரப்பர் படகுடன் 50 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதிநவீன ட்ரோன்களைக் கொண்டும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் பொதுமக்கள், முனியப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தும், மேட்டூர் பூங்காவிற்கு சென்று குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்கின்றனர்.  மேட்டூரில் மீன் வியாபாரமும் களைக்கட்டியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இன்று ஒருநாள் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் மேட்டூர் அணைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.