சேலம் மாவட்டத்தில் கடந்த 13.06.2026 காலை 6 மணி முதல் 14.06.2026 காலை 6 மணி வரை பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 89 மி.மீ. மழை பதிவாகியுள்ள நிலையில், சராசரி மழையளவு 5.56 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவில் உள்ள ஏத்தாப்பூர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் 32.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து எடப்பாடியில் 15.2 மி.மீ., வலப்பாடி அருகே ஆனைமடுவு அணைப் பகுதியில் 11 மி.மீ., கங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் 8 மி.மீ. மற்றும் ஏற்காட்டில் 5.4 மி.மீ. மழை பதிவானது.
மேலும் ஓமலூரில் 4.5 மி.மீ., கடையாம்பட்டியில் 3.5 மி.மீ., சங்ககிரியில் 2.1 மி.மீ., ஆத்தூரில் 2 மி.மீ., வலப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 2 மி.மீ., மேட்டூரில் 1.8 மி.மீ. மற்றும் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 0.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதற்கிடையில் தம்மம்பட்டி அரசு மருத்துவமனை, கரியகோவில் அணை, வீரகனூர், நத்தக்கரை உள்ளிட்ட சில பகுதிகளில் மழை பதிவாகவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தபடி சேலம் மாவட்டத்தில் லேசான மழை (2.5 முதல் 15.5 மி.மீ.) பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மழை காரணமாக மாவட்டத்தில் உயிரிழப்பு, காயம், வீட்டு சேதம் அல்லது கால்நடை இழப்பு எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



