ஆன்மிகம்

சேலம் ஆடித்திருவிழா- தயாராகும் மாரியம்மன் கோவில்கள்!

சேலம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது மாம்பழம். சேலம் திருவிழா என்றால் நம் நினைவுக்கு வருவது ஆடித்திருவிழா தான். ஆமாங்க ஆடித்திருவிழாவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் சேலம் மாநகரில் உள்ள எட்டுப்பேட்டை மாரியம்மன் கோயில்களிலும் முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

சேலம் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவின் நிகழ்ச்சி நிரல்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். 

சேலம் மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் சேலம் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலின் ஆடித்திருவிழா வரும் ஜூலை 22- ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, ஜூலை 23- ஆம் தேதி திருவிழா கொடியேற்றம், ஜூலை 29- ஆம் தேதி கம்பம் நடுதல், திருக்கல்யாணமும், ஆகஸ்ட் 04- ஆம் தேதி சக்தி அழைப்பும், ஆகஸ்ட் 05- ஆம் தேதி சக்தி கரகமும், ஆகஸ்ட் 06- ஆம் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்தல், உருளுதண்டமும், அழகு குத்துதலும், ஆகஸ்ட் 07- ஆம் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்தலும், ஆகஸ்ட் 08- ஆம் தேதி மஹா தேரோட்டமும், ஆகஸ்ட் 09- ஆம் தேதி கம்பம் கங்கை சேருதல் நிகழ்ச்சியும், ஆகஸ்ட் 10- ஆம் தேதி சத்தாபரணத்துடன் ஆடித்திருவிழா நிறைவுப் பெறுகிறது. 

சேலம் மாநகரில் பிறந்து வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்கள், ஆடித்திருவிழாவிற்கு சொந்த ஊருக்கு திரும்பி ஆடித்திருவிழாவை குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வர். சேலத்தின் ஒரே திருவிழா ஆடித்திருவிழா என்பதால் சேலம் மாநகரமே ஆடி மாதம் முழுவதும் விழாக்கோலம் பூண்டும் என்றால் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.