ட்ரெண்டிங்

108 இடங்கள் வென்ற கட்சியை ஏன் அழைக்கவில்லை?”.. சேலத்தில் ஆளுநர்க்கு எதிராக காங்கிரஸ் போராட்டம

 

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆட்சியமைப்பு விவகாரத்தை முன்னிட்டு, ஆளுநர் இராசேந்திர அர்லேகர் மீது சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வழங்கப்படாதது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்கள் ஆதரவை அதிக அளவில் பெற்ற கட்சியை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை மரபுகளை மீறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

மேலும், தமிழக பொறுப்பு ஆளுநர் இராசேந்திர அர்லேகர் அரசியல் அழுத்தத்தின் அடிப்படையில் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டையும் காங்கிரஸ் நிர்வாகிகள் முன்வைத்தனர். மக்கள் வழங்கிய தீர்ப்பை தாமதப்படுத்துவது ஜனநாயகத்திற்கு நல்ல முன்னுதாரணம் அல்ல என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

 

இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் சாரதா தேவி, ரத்தினவேல் மற்றும் தேவேந்திரன் ஆகியோர் தலைமையேற்று போராட்டத்தை முன்னின்று நடத்தினர்.

 

ஆர்ப்பாட்டத்தின் போது, “108 தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்” என்ற கோஷங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டன. காங்கிரஸ் தொண்டர்கள் விசில் ஊதியும் முழக்கங்கள் எழுப்பியும் தொண்டர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் கோட்டை மைதானம் முழுவதும் அரசியல் பரபரப்பு நிலவியது. 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் பாஸ்கர், மாவட்ட பொருளாளர் ராஜகணபதி, உடையாபட்டி பிரகாஷ், வரதராஜ், பச்சப்பட்டி பழனி, வசந்தம் சரவணன், கோபி குமரன், கருப்பூர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

 

சேலத்தில் நடைபெற்ற இந்த போராட்டம் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆட்சியமைப்பு குறித்த விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.