விளையாட்டு

தாய்லாந்தில் தங்கம் வென்ற சேலம் வீரர் சந்திப் குமாருக்கு உற்சாக வரவேற்பு !

 

சேலம்

தாய்லாந்தில் நடைபெற்ற பூப்பந்து (Ball Badminton) போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இதில் சேலம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த சந்திப் குமார் பங்கேற்று வெற்றியில் பங்காற்றினார்.

தாய்லாந்து நாட்டின் பட்டாயா பகுதியில் பால் பேட்மிட்டன் ஃபெடரேஷன் ஆஃப் ஆசியா சார்பில் இந்தியா-தாய்லாந்து டெஸ்ட் சீரிஸ் பூப்பந்து போட்டி கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் நடந்த இந்த போட்டியில், ஆண்கள் பிரிவில் இந்திய அணி தாய்லாந்தை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

வெற்றி பெற்று ரயிலில் சேலம் வந்தடைந்த சந்திப் குமாருக்கு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் குடும்பத்தினர், கிராம மக்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் பூங்கொத்து, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பேசிய சந்திப் குமார், “கிரிக்கெட்டுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் போல பூப்பந்து போட்டிக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். இந்த விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நான் அரசு பள்ளியில் படித்தேன்; ஆசிரியர்களின் உதவியால் தான் இந்த சாதனையை அடைந்தேன்” என தெரிவித்தார்.