தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் திருநாள் நாளை (ஜன.14) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்காக ஆறு நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் கிராமங்களில் வீட்டு வாசலில் பொங்கலிட்டு ஆதனுக்கு படையலிட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
பொங்கலுக்கு அடுத்த 2-வது நாள் கரிநாள் என்பதால் அன்றைய தினம் சைவ உணவு சமைத்து உண்பதை மக்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்த நாளில், வானத்தை ஒட்டிய பகுதியில் வசிக்கும் நபர்கள் காட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மான், முயல் உள்ளிட்ட விலங்குகள் வேட்டையில் ஈடுபடலாம் என்பதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இதற்காக அந்தந்த மாவட்ட வனத்துறையில் சிறப்பு தனிப்படைகளை அமைத்து ரோந்து பணியில் ஈடுபட வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் தெற்கு, சேர்வராயன் வடக்கு, ஏற்காடு, டேனிஷ்பேட்டை, வாழப்பாடி, மேட்டூர், ஆத்தூர், கருமந்துறை, தம்மம்பட்டி உள்ளிட்ட வனச்சரகப் பகுதிகளில் வனத்தையொட்டி இருக்கும் கிராமங்களிலும், வனச்சாலைகளிலும் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்காடு மலைப்பாதை, குப்பனூர் மலைப்பாதை, டேனிஷ்பேட்டை மலைப்பாதை ஆகியவற்றை ஒட்டிய காட்டிற்குள் இளைஞர்கள் சென்று மதுக்குடிக்க வாய்ப்பு இருப்பதால், அங்கு பகல் மற்றும் இரவு நேர ரோந்து பணிக்கு வனக்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்காடு மலைப்பாதை சோதனைச்சாவடியில் இன்று (ஜன.13) மாலை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு வாகன சோதனையை தீவிரமாக மேற்கொள்கின்றனர்.
பிடிப்படும் வேட்டைக்காரர்கள் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



