தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தனது 3வது கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று அறிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளையொட்டி, சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேலும் 6 முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டார்.
இதில் ஏற்கனவே மகளிர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை, கல்விக் கடன் ரத்து, ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் உள்ளிட்ட 10 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
புதிய 6 தேர்தல் வாக்குறுதிகள்:
குடும்பங்களுக்கு ரூ.10,000 கருணைத்தொகை:
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், சொத்து வரி, மின்சார கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் உயர்ந்துள்ள நிலையில், மக்களின் குடும்பச் சுமையை குறைக்கும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை தேடுபவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை:
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2,000 மற்றும் +2 வரை கல்வி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
மீனவர்களுக்கு நிவாரணத் தொகை உயர்வு:
மீன்பிடி தடைக்காலங்களில் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.8,000 இலிருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்படும்.
பொங்கல் பரிசுடன் ரூ.1,000:
ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன் கூடுதலாக ரூ.1,000 வழங்கப்படும்.
நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் உயர்வு:
கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாகவும் இலவச மின்சாரம் உயர்த்தப்படும்.
சிறு வியாபாரிகளுக்கு கடன் தள்ளுபடி:
நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், அதிமுகவின் இந்த புதிய அறிவிப்புகள் வாக்காளர்களிடையே கவனம் பெற்றுள்ளன.


