ட்ரெண்டிங்

95% ஆதரவு என் பக்கம் – பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் பேச்சு !

 

சேலம்,டிச.28: 

95 சதவீத பாட்டாளி மக்கள் என் பக்கமே உள்ளனர் என சேலம் பாமக பொதுக் குழுவில் ராமதாஸ் கூறினார். அன்புமணி பம்பாத்து வேலை ஒரு போதும் பலிக்காது என்றும்,வரும் தேர்தலில் நிச்சயம் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன் என்றும் தெரிவித்தார்.

சேலத்தில் இன்று பாமக செயற்குழு,பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸை கட்சித் தலைவராகவும், கௌரவத் தலைவராக ஜி.கே.மணியையும்,ஸ்ரீகாந்தி பரசுராமனையும் பொதுக்குழுவில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், கூட்டணி அமைக்க ராமதாஸுக்கு அதிகாரம் வழங்குவது உட்பட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்,இதுவரை நடந்திராத அளவிற்கு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடந்துள்ளது.அதற்கான ஏற்பாடுகளை செய்த சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டுகள். இந்த ஆண்டுக்கு விடை கொடுப்போம்.வரும் ஆண்டை வரவேற்போம்.

ஒரு கட்சியை எப்படி நிர்வாகம் செய்வது என நிர்வாகக் குழுவில் பேசி வருகிறோம். செயற்குழுவில் கட்சியை எப்படி வழிநடத்துவது என ஒவ்வொருவரும் சிறப்பாக பேசினீர்கள். அதை நிச்சயம் கட்சி உள்வாங்கி,மிகப்பெரிய வெற்றி பெற செயல்படும். 

இந்த நேரத்தில் எதைப் பேசி, எதை விடுவது என எனக்குள்ளே ஒரு குழப்பம். ஏனென்றால் எனக்கு இருக்கிற ஆதங்கத்தை கொட்டி உங்களிடம் பகிர்ந்து கொள்ள இந்த அவகாசம் போதாது. இடையில் நான் பேசியிருக்கலாம். ஆனால் நீங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன். பொதுக்குழுவில் அதிகம் எதிர்பார்த்து நீவந்திருப்பது எந்த கூட்டணி. நீங்கள் ஊர் திரும்பியதும், யாராவது கேட்டால், நான் அமைக்கும் அந்த கூட்டணி நிச்சயம் வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என சொல்லுங்கள்.10.5 சதவீத இடஒதுக்கீட்டை நிச்சயம் பெறுவோம்.

ஒரு குழு, ஒரு கூட்டம், ஒரு கும்பல். அவர்கள் எல்லாம் நான் வளர்த்த பிள்ளைகள். நான் பொறுப்பு கொடுத்த பிள்ளைகள் தான்,ஆனால்,இப்போது என்னையும்,ஜி.கே.மணியையும் தூற்றுகிறார்கள். 

என்னையும் நேரடியாக தாக்கத் தொடங்கி விட்டனர்:ஜி.கே.மணி நொந்து போய் சொல்கிறார்.ஒன்று நான் காணாமல் போகணும். இல்லையென்றால் சாகத்தான் வேண்டும்.30 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தற்கு இது தான் நிலை என்றதும் எனக்கு கஷ்டமாகி விட்டது. இப்போது என்னையும் நேரடியாக தாக்க தொடங்கி விட்டார்கள்.தமிழக மக்கள் அனைவரும் எனக்கு சொந்தம் தான். உறவினர்கள் தான்.அவர்கள் எல்லாம் என்னை எப்போதும் நேசிப்பவர்கள். மருத்துவர்களை போய் பார்த்தால், அன்புமணி ஏன் இப்படி செய்கிறார். 5, 6 வருடம் பொறுக்க கூடாதா என நிறைய பேர் கேட்கிறார்கள்.அவரை மாற்ற முடியாது என நான் சொல்லி விட்டேன்.

95 சதவீத பாட்டாளி மக்கள் என் பக்கம் உள்ளனர்:

இப்போது நடக்கிற செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழு எல்லாம் பார்க்கும்போது நூற்றுக்கு 95 விழுக்காடு பாட்டாளி மக்கள் என் பின்னால் தான் இருக்கிறார்கள்.அன்புமணி பின்னால் 5 சதவீதம் பேர் கூட இல்லை.ஆனால் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் செலவு செய்து பம்மாத்து வேலை செய்து வருகிறார்.

அன்புமணிக்கு பாடம் புகட்டுவோம்:

இந்த தேர்தலில்,அன்புமணிக்கு சரியான பாடம் புகட்டுவோம்.வரும் தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன். அந்த கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இந்த மக்கள்,என் பின்னால் பல ஆண்டுகளாக இருக்கிறார்கள்.அவர்கள் என்னை ஒருபோதும் கைவிட்டதில்லை. உனக்கு யார் இருக்கிறார்கள்.5 பேர் கூட இல்லை. 

என்னைப் போல தகப்பன் வேறு யாருக்காவது கிடைப்பார்களா எல்லாம் யாரால் கிடைத்தது. இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை.

எந்த பதவிக்கும் நான் ஆசைப்பட்டதில்லை:எந்த பதவிக்கும் நான் ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட்டிருந்தால் இந்திய அளவில் பெரிய பதவிகளுக்கு வந்திருப்பேன். ஆனால்,எனக்கு விருப்பமில்லை.அந்த சத்தியம் காரணமாகவே அன்புமணி பதவிக்கு வந்தார்.உனக்கு என்ன குறை வைத்தேன்.

ஒரு மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியை அமைப்பேன்.அந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியைத் தரும் என நான் உறுதியாக நம்புகிறேன்.நான் நினைப்பது நிச்சயம் நடக்கும். அப்படிப்பட்ட சூழல் இப்போது வந்திருக்கிறது.

பாட்டாளி சொந்தங்களை நினைத்தால் தான் தூக்கமே வருகிறது:சில நேரங்களில் தூக்க மாத்திரை போட்டால் கூட தூக்கம் வருவதில்லை. அன்புமணியை நினைத்தால் தூங்க முடியவில்லை. பாட்டாளி சொந்தங்களை நினைக்கும்போது தூங்கி விடுகிறேன். ஒரு நாளைக்கு குறைந்தது 500 பேர் என்னை சந்திப்பதால் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இருக்கும்போது, நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்றார்.

இந்தக் கூட்டத்தில், செயல் தலைவர் ஸ்ரீகாந்தி பரசுராமன், கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, இணை பொதுச்செயலாளர் இரா. அருள், மாவட்ட செயலாளர் கதிர் ராசரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.