ட்ரெண்டிங்

பாஜக எங்களை அழைத்து பேசவில்லை – டிசம்பர் 29-ல் சேலத்தில் பாமக கூட்டணி அறிவிப்பு-ஜி.கே.மணி !

 

சேலம்:

பாமகவிற்கு எத்தனை சீட்டுகள் வழங்கப்படும் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பாஜக தரப்பில் இதுவரை எங்களை அழைத்து எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார். கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பை வரும் டிசம்பர் 29ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் பொதுக்குழுவில் மருத்துவர் ராமதாஸ் வெளியிடுவார் என்றும் கூறினார்.

சேலம் மரவனேரி பகுதியில் உள்ள ஆயர் இல்லத்தில் பாமக ராமதாஸ் தரப்பு சார்பில் பேராயர்களுடன் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கிறிஸ்மஸ் வாழ்த்துகளை தெரிவித்ததுடன், கேக் வெட்டி கொண்டாடினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி:

வரும் டிசம்பர் 29ஆம் தேதி திங்கட்கிழமை சேலம் மாநகரில் பாமக புத்தாண்டு மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.2025-க்கு விடை கொடுத்து, 2026-ஐ வரவேற்போம் என்ற நோக்கில் இந்த சிறப்பு பொதுக்குழு நடைபெறுகிறது.என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மிகவும் முக்கியமான இந்தக் கூட்டத்தில் கூட்டணி குறித்து மருத்துவர் ராமதாஸ் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறினார்.

அதிமுக – பாஜக கூட்டணி மற்றும் பியூஸ் கோயில் சந்திப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த போது:-

பாஜக சார்பில் எங்களுக்கு எந்தவிதமான அழைப்பும் வரவில்லை. சந்திப்போ, பேச்சுவார்த்தையோ இதுவரை எதுவும் நடைபெறவில்லை. மருத்துவர் ஐயாவோ அல்லது எங்களோ யாருடனும் பாஜக பேசவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.

மேலும்,பாமக என்றால் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்தான்.பாமகவின் அடையாளமும்,வழிகாட்டுதலும் அவர் ஒருவரே என தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த உண்மை அது என்றார்.

அதேபோல்,கடந்த ஒரு ஆண்டு காலமாக மருத்துவர் ஐயாவுக்கு மிகப்பெரிய சோதனையும் வேதனையும் ஏற்பட்டது. அதன் வெளிப்பாடாக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு,டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் தலைவர் இல்லை என்பது தெளிவாகிவிட்டது என்றார்.

இறுதியாக,மருத்துவர் ராமதாஸ் சொன்னால்தான் மக்கள் வாக்களிப்பார்கள்.அவர் இணையும் கூட்டணிதான் வெற்றி கூட்டணி;அதுவே ஆட்சி அமைக்கும் என ஜி.கே.மணி தெரிவித்தார்.