சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட ஏதுவாக குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மூலம் டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை சூரமங்கலம் மண்டலம், சுப்ரமணிய நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இன்று (ஜன.03) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரால் 2025- ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சேலம் மாவட்டத்தில் 10,77,575 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 983 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் என மொத்தம் 10,78,558 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ஏதுவாக இன்று (ஜன.03) முதல் ஜன.08 வரை குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மூலம் டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இன்றைய தினம் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவது குறித்து சூரமங்கலம் மண்டலம். சுப்ரமணிய நகர் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வரும் ஜன.09 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். பொங்கல் பரிசு டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களின்படி, குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைக்கு சென்று பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம். அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும்.
மேற்கண்ட பொங்கல் பரிசு வழங்குவதற்கு விரிவான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆகவே தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் எவ்வித சிரமமும் இன்றி பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)