சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள பெட் பெட் சாலை, 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து பாதையாக இருந்து வருகிறது. இந்தச் சாலையை தினமும் பொதுமக்கள், அரசு பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஏற்காடு – பெட் பெட் சாலையில் உள்ள ஸ்டோன் பார்க் அருகே நேற்று (மதியம்) சுமார் 12.00 மணியளவில், திடீரென சாலை உள்வாங்கி சுமார் 3 அடி ஆழத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. சாலை நடுப்பகுதியில் ஏற்பட்ட இந்த பள்ளம், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
அந்த நேரத்தில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்ததால், பெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது. இல்லையெனில், பள்ளம் ஏற்பட்ட இடத்தில் வாகனங்கள் சென்றிருந்தால் உயிரிழப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
சாலை அருகே கடை வைத்திருந்த ஒருவர், உடனடியாக விழிப்புணர்வுடன் செயல்பட்டு, பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து, பிளக்ஸ் போர்டு வைத்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும், இச்சம்பவம் குறித்து நெடுஞ்சாலைத் துறையினருக்கு தகவல் அளித்தார்.
தகவல் கிடைத்ததும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளத்தை பார்வையிட்டனர். பின்னர், எம்.சாண்ட் மூட்டைகளை நிரப்பி தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதன் மூலம் உடனடி அபாயம் தவிர்க்கப்பட்டாலும், முழுமையான சீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
திடீரென ஏற்பட்ட இந்த பள்ளம் காரணமாக, அப்பகுதியில் சில மணி நேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக மலை கிராமங்களுக்கு செல்லும் மக்கள், மாணவர்கள்,சிரமத்தை எதிர்கொண்டனர்.
மழைக்காலங்களில் சாலையின் தரம் குறைவாக இருப்பதும், நீர்வழித்தடங்கள் முறையாக பராமரிக்கப்படாததும் இத்தகைய சம்பவங்களுக்கு காரணமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, சாலை முழுவதும் ஆய்வு செய்து, நிரந்தர சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ON5Rrtzg22.jpeg )
