ட்ரெண்டிங்

பேருந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை- நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வெள்ளையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணக்காடு பகுதியைச் சேர்ந்த தம்பதி சின்னத்தம்பி- சந்திரா. இந்த தம்பதிக்கு நித்யா என்ற மகளும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 2019- ஆம் ஆண்டு சின்னத்தம்பி தனது குடும்பத்தினருடன் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது, அவரது இருசக்கர வாகனம் மீது வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியுள்ளது. இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த மூன்று பேரும் தூக்கி வீசப்பட்ட சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் அருணகிரி (வயது 35) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஆத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்தது. 

அதன் தொடர்ச்சியாக, மாஜிஸ்திரேட் அருண்குமார், தனியார் பேருந்து ஓட்டுநர் அருணகிரிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இதையடுத்து, அருணகிரியை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.