ட்ரெண்டிங்

நோட்டாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் தான் இனி போட்டி-செரிப் விமர்சனம்!

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறிய நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சிறுபான்மை சமூக கட்சிகளின் தலைவர்கள் அடுத்தடுத்துச் சந்தித்து வருகின்றனர்.

 

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் செரிப், தங்கள் கட்சியின் நிர்வாகிகளுடன் சேலம் மாவட்டம், நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார்.

 

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செரிப்,பா.ஜ.க. உடன் இனி ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி தங்களிடம் உறுதிப்படத் தெரிவித்தார். இனி தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஒற்றை இலக்க சீட்டுகளில் கூட வெற்றி பெற முடியாது. நோட்டாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் தான் இனி போட்டி. தமிழ்நாட்டில் இனி பா.ஜ.க.வால் எம்.பி., எம்.எல்.ஏ.க்களைப் பெற முடியாது. திராவிட கட்சிகளின் முதுகில் ஏறி இதுவரை பா.ஜ.க. சவாரி செய்தது,என்று விமர்சித்தார்.

 

ஏற்கனவே, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.