சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சேலம் கேம்ப் பகுதியில் மர்ம நபர்களால் பெயிண்டர் வெட்டி படுகொலை. போலீசார் விசாரணை.
சேலம் மாவட்டம் ,மேட்டூர் அருகே சேலம் கேம்ப், பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(27) இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். மணிகண்டனுக்கு திருமணமாகி கௌசல்யா என்ற மனைவியும் மூன்று வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிய மணிகண்டன் மாலை வரை வீடு திரும்பாத நிலையில் இன்று காலை சேலம் கேம்ப் அடுத்த பாரதி நகர் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து அவரது சகோதரர் ஜெயராமன் கருமலைக்கூடல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கருமலைக்கூடல் போலீசார் மணிகண்டன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மது போதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மணிகண்டன் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.
கொலை செய்யப்பட்டுள்ள மணிகண்டன் மீது கருமலை கூடல் காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



-SXgDfGgJfO.jpg)