ட்ரெண்டிங்

171 ஆண்டுகளுக்கு பின் நிறைவு கண்ட பதிவு தபால் சேவை !!!

 

இந்திய அஞ்சல் துறையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய பதிவு தபால் சேவை (Registered Post Service), இன்று வரலாற்றாக முடிவுக்கு வந்துள்ளது.

171 ஆண்டுகளாக மக்கள், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவராலும் பயன்படுத்தப்பட்ட இந்த சேவை, செப்டம்பர் 30 நள்ளிரவுடன் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது.

பதிவு தபாலின் வரலாறு :-

1854-ஆம் ஆண்டில் இந்தியாவில் தொடங்கப்பட்ட பதிவு தபால் சேவை, ஒரு கடிதம் அல்லது ஆவணம் பாதுகாப்பாக சென்றடைந்ததற்கான உறுதியை வழங்கியது. 

குறிப்பாக அரசின் அதிகாரபூர்வ தகவல்கள்,நீதிமன்ற நோட்டீஸ்கள்,கல்வி தொடர்பான ஆவணங்கள், வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் உள்ளிட்டவற்றில் பதிவு தபால் மக்கள் வாழ்க்கையின் அத்தியாவசிய சேவையாக இருந்து வந்தது.

ஒரு காலத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள், நீதிமன்ற உத்தரவு, அரசு ஆவணங்கள் ஆகியவை பதிவு தபால் இல்லாமல் சாத்தியமே இல்லை என்று சொல்லப்படும் அளவுக்கு, இந்த சேவை மக்களிடம் வேரூன்றியிருந்தது. தற்போது டிஜிட்டல் காலத்தில் பதிவு தபாலுக்கு பதிலாக மின்னஞ்சல், ஸ்பீடு போஸ்ட், கூரியர் சேவைகள் ஆகியவை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த சேவை நிறுத்தப்பட்டதற்கான காரணம்,காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் சேவைகள் அதிகரித்தன. மக்கள் விரைவான மற்றும் பின்தொடரக்கூடிய (Tracking) சேவையை விரும்பத் தொடங்கினர். இதனை கருத்தில் கொண்டு அஞ்சல் துறை, ஸ்பீடு போஸ்ட் (Speed Post) சேவையை மேம்படுத்தியது. வேகமான டெலிவரி, ஆன்லைன் டிராக்கிங்,சர்வதேச அனுப்பும் வசதி போன்ற பல அம்சங்களைக் கொண்டதால்,பதிவு தபாலுக்கு மாற்றாக ஸ்பீடு போஸ்ட் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.இதனால் பதிவு தபாலை நிறுத்தும் முடிவை அஞ்சல் துறை எடுத்துள்ளது.

பதிவு தபால் சேவை நிறுத்தப்பட்டாலும், அதே தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்பீடு போஸ்ட் மட்டுமின்றி, இந்திய அஞ்சல் துறையின் பல்வேறு நவீன சேவைகள் மக்கள் வசதிக்காக செயல்படுத்தப்பட்டுள்ளன.

171 ஆண்டுகளாக இந்திய அஞ்சல் துறையின் பெருமையாக விளங்கிய பதிவு தபால் சேவை முடிவுக்கு வந்துள்ளது என்பது மக்களை சற்று சோகப்படுத்தினாலும்,புதிய காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப அஞ்சல் துறை எடுத்த மாற்றம் பாராட்டத்தக்கது என்று கூறப்படுகிறது.