ட்ரெண்டிங்

சிமெண்ட் கல்லால் செங்கல் சூளைகளுக்கு வீழ்ச்சி - விரிவான தகவல்!

கட்டுமான தொழிலில் மிக முக்கியமானது செங்கல். இவற்றின் பிறப்பிப்படமாக உள்ள செங்கல் சூளைகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம். 

சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தம்மம்பட்டி, கெங்கவல்லி, கூடமலை உள்ளிட்டப் பகுதிகளில் 1,000- க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இந்த தொழிலை வாழ்வாதாரமாக நம்பி 5,000- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

தற்போது செங்கல் சூளை உரிமையாளர்கள் சந்தித்து வரும் இன்னல்களுக்கு தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் சூழல் இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். செங்கல் தயாரிப்பதற்கான மிக முக்கிய மூலப்பொருளான மண் ஏற்றத்தின் காரணமாக, தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு செங்கல் சூளை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

மண் விலையேற்றம் ஒருபுறம் இருக்க, சிமெண்ட் செங்கல்கள் அதிகரித்து வருவதாலும், சூளைகள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் கூறுகையில், "சிமெண்ட் கல் வந்ததால், செங்கல் தொழில் நஷ்டம் அடைந்துள்ளது. செங்கலை உற்பத்திச் செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது. மண் விலை உயர்ந்ததால் தொழில் செய்ய முடியவில்லை" என்றனர். 

ஆத்தூர் புதுஉடையம்பட்டி, ராமநாயக்கன்பாளையம், தென்னங்குடிபாளையம், செல்லியம்பாளையம் பகுதிகளில் மட்டும் 70- க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வந்த நிலையில், தற்போது 35 முதல் 40 செங்கல் சூளைகள் மட்டுமே செயல்பட்டு வருவதாகவும், செங்கல் சூளை வைத்திருந்தவர்கள் தற்போது மற்ற செங்கல் சூளைகளுக்கு கூலி வேலைகளுக்காக செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றன.